போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூடப்பட்டது


போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூடப்பட்டது
x

நெல் மூட்டைகள் வரத்து அதிகரிப்பால் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூடப்பட்டது.

திருவண்ணாமலை

போளூர்

நெல் மூட்டைகள் வரத்து அதிகரிப்பால் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூடப்பட்டது.

ஒழுங்குமுறை விற்பனை கூடம்

போளூர் தாலுகாவில் விவசாயிகள் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர். இதனை விவசாயிகள் தற்போது அறுவடை செய்து கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு அறுவடை செய்யப்பட்ட அனைத்து நெல் மூட்டைகளையும் விவசாயிகள் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்குதான் கொண்டு வருகின்றனர்.

நெல் மூட்டைகள் அதிக வரத்தால் திடீரென்று போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூடப்பட்டது. மேலும் வருகிற 23-ந் தேதி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் அதிகாரி வெங்கடேசன் கூறியதாவது:-

மூட்டைகள் சேதம் அடையும்

போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மொத்தம் 7 குடோன்கள் உள்ளன. இந்த குடோன்களில் 12 ஆயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்க முடியும். வெளியில் 5 ஆயிரம் என மொத்தம் 17 ஆயிரம் மூட்டைகள் வைக்க முடியும்.

அதற்கு மேல் வைத்தால் மழைக்காலங்களில் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடையும். இதனால் விவசாயிகள் பாதிப்படைவார்கள்.

இந்த விற்பனை கூடத்தில் ஒரு நாளைக்கு 4,500 முதல் 5 ஆயிரம் வரை எடை போட்டு விற்பனை செய்ய முடியும். நெல் மூட்டைகள் அதிக வரத்தால் விலை குறைய வாய்ப்புண்டு.

இதனால் விவசாயிகள் பாதிப்படைவார்கள். இதனை கருத்தில் கொண்டு வருகிற 23-ந் தேதி வரை நெல் மூட்டைகளை விற்பனைக்கு எடுத்து வர வேண்டாம் என்று விவசாயிகளிடம் கூறியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விவசாய சங்க தலைவர் பார்த்திபன் கூறியதாவது:-

நேரடி நெல் கொள்முதல் நிலையம்

இதுபோன்ற நேரங்களில் விவசாயிகள் கஷ்டப்படக் கூடாது என்று தமிழக அரசு போளூர் தாலுகாவில் புதுப்பாளையம், குன்னத்தூர், மண்டகொளத்தூர் ஆகிய 3 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையம் கடந்த ஜனவரி 8-ந் தேதி தொடங்கப்பட்டது.

இந்த 3 நேரடி கொள்முதல் நிலையங்களில் பதிவுகள் அதிகமாக உள்ளதால் நெல் மூட்டைகளை எடுப்பதற்கு தயங்குகின்றனர். இதனால் விவசாயிகள் பாதிப்படைகின்றனர்.

இந்த 3 நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்தால் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்திற்கு இது போன்ற சிரமங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை.

எனவே உடனடியாக மாவட்ட கலெக்டர் தலையிட்டு நேரடி கொள்முதல் நிலையங்களில் அதிக அளவில் பதிவு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story