கடலூர்: மீனவர் பஞ்சநாதன் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு..!
கடலூர், மீனவர் பஞ்சநாதன் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடலூர்,
கடலூரில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், துறைமுகம் சோனாங்குப்பம் பகுதி மீனவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 15.5.2018 அன்று இரு தரப்பு மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது மீனவர்கள் கத்தி, அரிவாள், சுளுக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் சோனாங்குப்பத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரும், மீனவருமான பஞ்சநாதன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 21 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் முதலாவது மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கு நடக்கும் போதே ஒருவர் இறந்து விட்டார். இதையடுத்து 20 பேர் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில், சோனாங்குப்பம் மீனவர் பஞ்சநாதன் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆறுமுகம், கந்தன், சுரேந்தர், ஓசைமணி, சரண்ராஜ், சுதாகர் உள்ளிட்டோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. குற்றவாளிகள் 10 பேருக்குமான தண்டனை விவரஙக்ளை மாலை 3 மணிக்கு நிதிமன்றம் அறிவிக்க உள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோர்ட்டு வளாகம் மற்றும் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம் மீனவ கிராமங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.