கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்புதலைகீழாக நின்று போராட்டம் நடத்திய தையல் தொழிலாளிபாசிமுத்தான் ஓடையில் நகராட்சி கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரிக்கை


கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்புதலைகீழாக நின்று போராட்டம் நடத்திய தையல் தொழிலாளிபாசிமுத்தான் ஓடையில் நகராட்சி கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாசிமுத்தான் ஓடையில் நகராட்சி கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் தலைகீழாக நின்று தையல் தொழிலாளி போராட்டம் நடத்தினாா்.

கடலூர்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு மனு கொடுப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்தனர். அவர்களை போலீசார் தீவிர சோதனை நடத்திய பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். அப்போது சிதம்பரம் அருகே கீழ்அனுவம்பட்டு சாலக்கரையை சேர்ந்த தையல் தொழிலாளி மணி (வயது 40) என்பவர் கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக வந்தார். பின்னர் அவர் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் தலை கீழாக நின்று, போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பாசிமுத்தான் ஓடையில் சிதம்பரம் நகராட்சி நிர்வாகம் கழிவுநீரை திறந்து விடுவதை தடுக்க வேண்டும் என்று கோஷமிட்டார்.

இதை பார்த்த போலீசார், அவரை சமாதானம் செய்தனர். இதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டார். தொடர்ந்து அவரிடம் போலீசார், உங்கள் கோரிக்கையை கலெக்டரிடம் மனுவாக கொடுங்கள் என்றனர். இதையடுத்து அவர் பொதுமக்கள் குறைகேட்பு கூட்ட அரங்கிற்கு சென்று, மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகனிடம் மனு கொடுத்தார்.

அந்த மனுவில் பல ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வரும் பாசிமுத்தான் ஓடையில் சிதம்பரம் நகராட்சி நிர்வாகம் கழிவுநீரை திறந்து விடுகிறது. இதனால் ஓடை முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலையும் ஏற்படுகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு பாசிமுத்தான் ஓடையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர், இது பற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இருப்பினும் கலெக்டர் அலுவலகத்தில் தையல் தொழிலாளி தலைகீழாக நின்று போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story