கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தீ கரும்புகை வெளியேறியதால் பரபரப்பு
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கரும்புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு மனு அளிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்திருந்தனர். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் இருந்து திடீரென தீ எரிந்தது. அதில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் ஏதோ தீ விபத்து நடந்ததாக கூறி, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கலெக்டர் அலுவலக ஊழியர்களும் வந்து பார்த்தனர். அப்போது பதிவறை கட்டிடத்தின் அருகில் உள்ள குப்பைகளை ஊழியர்கள் தீ வைத்து கொளுத்திய போது, அங்கு கிடந்த டயர்களும் தீப்பிடித்து எரிந்ததில் கரும்புகை வெளியேறியது தெரிய வந்தது. இதனால் நிம்மதி அடைந்த போலீசாரும், ஊழியர்களும் அங்கிருந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.