யாருடைய ஆட்சியில் குப்பைகள் குவிகிறது: மாநகர கூட்டத்தில் காரசார வாக்குவாதம் நிரந்தர தீர்வு காணப்படும் என மேயர் சுந்தரி ராஜா உறுதி


யாருடைய ஆட்சியில் குப்பைகள் குவிகிறது:  மாநகர கூட்டத்தில் காரசார வாக்குவாதம்  நிரந்தர தீர்வு காணப்படும் என மேயர் சுந்தரி ராஜா உறுதி
x

கடலூர் மாநகராட்சி பகுதியில் யாருடைய ஆட்சிக்காலத்தில் குப்பைகள் குவிகிறது என்று மாநகர கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என மேயர் சுந்தரி ராஜா உறுதியளித்துள்ளார்.

கடலூர்

மாநகராட்சி கூட்டம்

கடலூர் மாநகராட்சி கூட்டம் மன்ற அலுவலகத்தில் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் நவேந்திரன், பொறியாளர் புண்ணியமூர்த்தி, நகர்நல அலுவலர் அரவிந்த்ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள், வார்டுகளில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற விவாதங்களின் விவரம் வருமாறு:-

குப்பைகள்

சாய்துனிஷா (தி.மு.க.) :- சரவணாநகர் பகுதியில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் சாலையை உடைத்து, தண்ணீரை திறந்து விட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதை தடுக்க வடிகால் வசதி அமைத்து தர வேண்டும். காலி மனையில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயர்:-காலி மனைகளில் வேலி அமைக்க அதன் உரிமையாளர்களிடம் கூற வேண்டும். இல்லையென்றால் காலி மனையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்று பதாகை வையுங்கள். பிறகு அவர்களிடம் பேசி தீர்வு காணலாம்.

சங்கீதா வசந்தராஜ் (அ.தி.மு.க.) :- காலிமனையில் உள்ள குப்பைக்கு தீர்வு சொல்கிறீர்கள். கெடிலம் ஆற்றங்கரையில் எவ்வளவு குப்பைகள் கொட்டப்படுகிறது. தெருக்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதற்கு என்ன தீர்வு காண போகிறீர்கள். கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் இப்படி தெருக்களில் குப்பைகள் குவிந்து கிடக்கவில்லை. உடனுக்குடன் அகற்றி விட்டோம். ஆனால் இந்த ஆட்சியில் தான் குப்பைகள் அதிகமாக குவிந்து கிடக்கிறது. புதிய பஸ் நிலையத்தை கடலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் தான் அமைக்க வேண்டும். எம்.புதூருக்கு மாற்றினால் மக்களை திரட்டி அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்துவோம்.

மேயர்:- கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தான் குப்பைகள் அதிகமாக தேங்கி கிடந்தது. அந்த குப்பைகளை தான் அகற்ற நிரந்தர இடம் பார்த்து வருகிறோம் என்றார்.

வாக்குவாதம்

அப்போது, தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலரும், மண்டல குழு தலைவருமான சங்கீதா உள்ளிட்ட தி.மு.க. கவுன்சிலர்கள், அ.தி.மு.க. ஆட்சியில் தான் குப்பைகள் அதிகம் கிடந்தது. தி.மு.க. ஆட்சியை எப்படி குறை கூறலாம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சுரேஷ்பாபு, பரணிமுருகன், வினோத் குமார் ஆகியோர் அ.தி.மு.க. ஆட்சியில் தெருக்களில் குப்பைகள் இல்லை. ஆனால் தி.மு.க ஆட்சியில் தற்போது 4 மாதமாக குப்பைகள் தெருக்களில் குவிந்து கிடக்கிறது. இதை அகற்ற வேண்டும் என்று தான் கூறுகிறோம் என்று காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உடன் மேயர், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின்பேரில் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறோம். பாபு கலையரங்கம், வசந்தராயன்பாளையம் ஆகிய இடங்களில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

தீர்வு

கவுன்சிலர் கண்ணன் (த.வா.க.), துணை மேயர் தலையிட்டால் வெள்ளப்பாக்கத்தில் குப்பை கிடங்கு அமைக்கலாம் என்றார். இதை கேட்ட துணை மேயர் தாமரைச்செல்வன், வெள்ளப்பாக்கம் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதி அளித்தால், அந்த பகுதி மக்களிடம் பேசி தீர்வு காணலாம். மேலும் எம்.புதூரில் புதிதாக அமைய உள்ள பஸ் நிலையத்திற்கு அருகில் இடம் உள்ளது. அதிலும் குப்பை கிடங்கு அமைக்கலாம் என்றார்.

அதற்கு மேயர், பஸ் நிலையம் அமைய இருக்கும் இடத்துக்கு அருகில் மருத்துவக்கல்லூரி அமைய வாய்ப்பு உள்ளது என்றார்.

பிரசன்னகுமார் (தி.மு.க.) :- வார்டில் அனைத்து தெருக்களில் உள்ள குப்பைகளையும் சேகரித்து, ஒரே இடத்தில் குவித்து, மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்தால் இந்த பிரச்சினை இருக்காது.

இவ்வாறு விவாதம் நடந்தது.


Next Story