கூடலூரில் தொடர் மழையால் வெள்ளம் சூழ்ந்தது: 12 வீடுகள் இடிந்து விழுந்தன- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


கூடலூரில் தொடர் மழையால் வெள்ளம் சூழ்ந்தது:  12 வீடுகள் இடிந்து விழுந்தன- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x

கூடலூர் பகுதியில் தொடர் மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் 12 வீடுகள் இடிந்து விழுந்தன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் பகுதியில் தொடர் மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் 12 வீடுகள் இடிந்து விழுந்தன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் சூழ்ந்தது

கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை முதல் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. இதனால் பள்ளிக்கூடத்துக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

பகல் 3 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. இதனால் ஆற்று வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த சமயத்தில் 1-ம் மைல் கோகோகாடு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர். சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு மழையின் தாக்கம் சற்று குறைந்ததால் வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து குறைந்தது.

12 வீடுகள் சேதம்

இதேபோல் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆத்தூர் பகுதியில் பலத்த மழையால் தோட்ட தொழிலாளர்கள் லீலா, அம்மா முத்து உள்பட பலரது வீட்டு சுவர்கள் இடிந்து விழுந்தது. மேலும் வீடுகளில் இருந்த உபயோகப் பொருட்கள் சேதம் அடைந்தது. மேலும் வீடுகள் இடிந்ததையடுத்து அங்கிருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ஓவேலி பேரூராட்சி தலைவர் சித்ராதேவி, செயல் அலுவலர் ஹரிதாஸ் உள்ளிட்ட பேரூராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வரைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் அளித்தனர்.

இது குறித்து வருவாய்த் துறையினர் கூறும்போது, தாலுகா பகுதியில் 12 வீடுகள் மழையால் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது என தெரிவித்தனர். தொடர்ந்து மழை பெய்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் மின்வினியோகமும் பெருமளவு பாதிக்கப்பட்டது.


Next Story