கடலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதம்
கடலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு பணப்பலனை உடனே வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு வழங்கும் அதே நாளில், அதே விகிதத்தில் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் (பொறுப்பு) ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராசன் தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் நாட்டுதுரை வரவேற்றார்.
போராட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் மாவட்ட நிர்வாகி சுமித்ரா, தமிழ்நாடு வணிக வரி பணியாளர் சங்க மாநில தலைவர் ஜனார்த்தனன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க எட்டியப்பன், வணிக வரி ஜெயராஜ் மற்றும் பண்டரிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன் நிறைவுரையாற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் சண்முகசிகாமணி நன்றி கூறினார்.