கடலூர்: சளி சிகிச்சைக்காக மருத்துவமனை வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போடப்பட்டதால் பரபரப்பு..!
கடலூரில் சளி சிகிச்சைக்காக மருத்துவமனை வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்,
கடலூர் அரசு மருத்துவமனையில் சளி சிகிச்சைக்காக வந்த 12 வயது சிறுமிக்கு செவிலியர்களின் நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாய்க்கடி ஊசி போடப்பட்டதால் திடீரென மயக்கமடைந்த 12 வயது சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
சிறுமியின் தந்தை கருணாகரன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
என்னுடைய மூத்த மகள் சாதனாவுக்கு (வயது 13) உடல்நிலை சரியில்லை. அவரை சிகிச்சைக்காக நேற்று முன்தினம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தேன். அங்கு எனது மகளை பரிசோதனை செய்த டாக்டரிடம், எனது மகளுக்கு சளி பிரச்சினை இருப்பதாக தெரிவித்தேன். இதையடுத்து எனது மகளை பரிசோதனை செய்த டாக்டர், அவருக்கு ஊசி போடவும், மாத்திரையும் எழுதி சீட்டு கொடுத்தார். அந்த சீட்டை பெற்ற நான், மாத்திரை வாங்கிக்கொண்டு ஊசி போடும் இடத்திற்கு வந்தேன்.
அங்கிருந்த செவிலியர் என்னிடம் சீட்டை வாங்கிக் கூட பார்க்காமல், எனது மகளுக்கு 2 ஊசி போட்டார். அப்போது நான் எதற்காக 2 ஊசி போடுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், நாய் கடித்தால் 2 ஊசி தான் போட வேண்டும் என்று கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நான், எனது மகளுக்கு சளி பிரச்சினை தான் என்றேன். அதற்கு அவர் மலுப்பலாக பதில் அளித்தார்.
இதற்கிடையில் எனது மகளுக்கு மயக்கம் ஏற்பட்டது. உடன் அவரை உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் பிரிவில் சேர்த்து உள்ளேன். ஆகவே எனது மகளுக்கு அலட்சியமாக சிகிச்சை அளித்த செவிலியர், பணியில் இருந்த டாக்டர், கண்காணிப்பாளர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.