கடலூர்கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் மயங்கி விழுந்த விவசாயி சாவுமனு அளிக்க வந்த போது பரிதாபம்


கடலூர்கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் மயங்கி விழுந்த விவசாயி சாவுமனு அளிக்க வந்த போது பரிதாபம்
x
தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்க வந்த விவசாயி நுழைவுவாயிலில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

கடலூர்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குமாரக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 70), விவசாயி. இவர் நேற்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்திற்கு மனு அளிப்பதற்காக வந்திருந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் மனு எழுதிவிட்டு, அதனை நகல் எடுப்பதற்காக நடந்து சென்றார். அப்போது, ராஜதுரை திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள், உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ராஜதுரை, ஆம்புலன்சில் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜதுரை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மவுன அஞ்சலி

இதற்கிடையே மனு அளிக்க வந்த விவசாயி திடீரென இறந்தது பற்றி அறிந்த கலெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் குறைகேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story