கடலூர்காசி விஸ்வநாதர் கோவிலில் வெள்ளி கிரீடம், தாலி சங்கிலி திருட்டுமுகமூடி கொள்ளையனுக்கு போலீஸ் வலைவீச்சு


கடலூர்காசி விஸ்வநாதர் கோவிலில் வெள்ளி கிரீடம், தாலி சங்கிலி திருட்டுமுகமூடி கொள்ளையனுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் காசிவிஸ்வநாதர் கோவிலில் வெள்ளி கிரீடம், தாலி சங்கிலியை திருடிச்சென்ற முகமூடி கொள்ளையனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்

கடலூர் ஜவான்ஸ் பவன் சாலையில் கெடிலம் ஆற்றங்கரையோரம் காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் விநாயகர் சன்னதி, சண்முக ஞானியார் சித்தர் பீடம் உள்ளது. இந்த கோவிலுக்கு காலை, மாலை நேரங்களில் பக்தர்கள் வந்து தினந்தோறும் சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பூசாரி முருகையன் பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றார்.

வெள்ளி கிரீடம், தாலி சங்கிலி திருட்டு

பின்னர் நேற்று காலை மீண்டும் கோவிலை திறப்பதற்காக வந்தார். அப்போது கோவில் இரும்பு கேட் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் கோவிலின் உள்ளே இருந்த 2 மரக்கதவு பூட்டுகளும், பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூசாரி முருகையன் பீரோவை பார்த்தார். அங்கே சாமிக்கு பயன்படுத்தும் 2 வெள்ளி கிரீடம், தாலி சங்கிலியை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.

இதையடுத்து அவர் உடனடியாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது முகமூடி அணிந்த கொள்ளையன் ஒருவன் கையில் இரும்பு கம்பியுடன் வந்து, அடுத்தடுத்து 3 பூட்டுகளை உடைத்து, உள்ளே புகுந்து பீரோவில் இருந்த வெள்ளி கிரீடம், தாலி சங்கிலி ஆகியவற்றை திருடிச்செல்வது தெரியவந்தது.

வலைவீச்சு

சிறிது நேரத்தில் கண்காணிப்பு கேமரா இணைப்பை துண்டித்து விட்டு அந்த கொள்ளையன் தப்பிச்செல்வது பதிவாகி இருந்தது. இதுபற்றி கோவில் பூசாரி முருகையன் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த கொள்ளையன் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதோடு அவனை வலைவீசி தேடி வருகின்றனர். கோவில் பூட்டை உடைத்து வெள்ளி கிரீடம், தாலி சங்கிலி திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story