உழவர் குழுவினர், வருவாய் நிர்வாக அலுவலர் குழு அமைப்பு


உழவர் குழுவினர், வருவாய் நிர்வாக அலுவலர் குழு அமைப்பு
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூர்வாரும் பணியை கண்காணிக்க உழவர் குழுவினர், வருவாய் நிர்வாக அலுவலர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் மகாபாரதி கூறினார்.

மயிலாடுதுறை

தூர்வாரும் பணியை கண்காணிக்க உழவர் குழுவினர், வருவாய் நிர்வாக அலுவலர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் மகாபாரதி கூறினார்.

கிராம சபை கூட்டம்

மே.1 தொழிலாளர் தினத்தையொட்டி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் வரதம்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மாவட்ட கலெக்டர் மகாபாரதி கலந்து கொண்டார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினத்தை ஒட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. கிராம சபை கூட்டம் என்பது அனைத்து கிராம மக்களும் வந்து ஊராட்சியில் என்னென்ன செய்யப்பட்டன.

வரவு, செலவு கணக்குகள்

கிராம சபைக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் ஊராட்சியில் நடைபெற்ற எல்லா வரவு செலவு கணக்குகளை பொதுமக்கள் முன்பாக படிக்க வேண்டும். மேலும் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் போன்ற முக்கிய பொருட்கள் தெரியப்படுத்தப்படும். கிராம சபைக் கூட்டம் தொடங்கும் நேரம் செயலி வாயிலாக கண்காணிக்கப்படுகிறது. பொது மக்கள் முன்னிலையில் வாசிக்கப்படும் முக்கிய கூட்டப் பொருட்கள் தொடர்பாக சந்தேகம் இருப்பின் பொது மக்கள் அதனைக் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும். இன்று முதல் நம்ம ஊரு சூப்பரு திட்டம் 45 நாட்களுக்கு செயல்படுத்தப்படுகிறது.

தூர்வாரும் பணிகள்

நமது மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் இயங்கும் குளங்கள், இரண்டு நீர்வள ஆதாரத்துறையின் கீழ் உள்ள 743 குளங்களில் வண்டல்மண் எடுத்துக் கொள்ள அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகள் வண்டல்மண் எடுத்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் 51 பணிகள் ரூ.8 கோடியே 6 லட்சம் செலவில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியினை கண்காணிக்க உழவர் குழுவினர், வருவாய் நிர்வாக அலுவலர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குநர் ஸ்ரீலேகா, வேளாண் இணை இயக்குநர் சேகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபால், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, உதவி செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) ஸ்ரீதர், ஒன்றியக் குழுத் தலைவி காமாட்சிமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா, ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தன். ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் அன்பழகன் மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம மக்கள் கலந்துகொண்டனர்.


Next Story