பழனி கிரிவீதிகளில் இடையூறாக இருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றம்
பழனி கிரிவீதிகளில் இடையூறாக இருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 29-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் காலை, மாலையில் வீதியுலா வருகிறார். அப்போது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. மறுநாள் பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்து வழிபடுவார்கள்.
இந்தநிலையில் பழனி தேரோட்டத்துக்கான ஏற்பாடுகள் கோவில் சார்பில் முழுவீச்சில் நடந்து வருகிறது. பொதுவாக பழனியில் தைப்பூசம், வைகாசி விசாகம் உள்ளிட்ட திருவிழா தேரோட்டம், ரதவீதிகளில் நடைபெறும். பங்குனி உத்திர தேரோட்டம் மட்டுமே கிரிவீதியில் நடைபெறும். இதனால் தேரோட்டத்தை முன்னிட்டு கிரிவீதிகளில் தேர் செல்வதற்கு இடையூறாக உள்ள சாலையோர மரக்கிளைகளை நேற்று பணியாளர்கள் வெட்டி அகற்றினர். அப்போது உயரமான மரங்கள் உள்ள இடங்களில் 'ஹைட்ராலிக்' வசதி கொண்ட எந்திரத்தில் ஏறி கிளைகள் வெட்டப்பட்டது.