ரெயில் நிலையத்தில் மரங்களை வெட்டுவதா? - பயணிகள் கண்டனம்
கேரளாவில் ஆலமரம் வெட்டப்படாத நிலையில் தென்காசி ரெயில் நிலையத்தில் மட்டும் மரங்களை வெட்டுவதா? என்று பயணிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
நெல்லை-திருச்செந்தூர் இடையே ரெயில் வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுவிட்ட நிலையில், விருதுநகர்-செங்கோட்டை, நெல்லை-தென்காசி ரெயில் வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மின்மயமாக்கல் பணிகளுக்காக ஒரு சில இடங்களில் மரங்களை வெட்டாமல், அதற்கு தகுந்தாற்போல் மின்கம்பங்கள் அமைத்து மின்மயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
ஆனால் தென்காசி ரெயில் நிலையத்தில் 2 மற்றும் 3-வது நடைமேடையில் உள்ள நிழல் தரும் பெரிய பெரிய மரங்களை வெட்டுவதற்கு ஆயத்த பணிகள் நடைபெற்று வந்த நிலையில் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தெற்கு ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கும், மத்திய மின்மயமாக்கல் பிரிவு அதிகாரிகளுக்கும் இதுகுறித்து பல்வேறு தரப்பினர் சார்பில் கடிதம் எழுதப்பட்டது. ஆனாலும் அது எதையும் கண்டு கொள்ளாமல் தென்காசி ரெயில் நிலையத்தில் 2 மற்றும் 3-வது நடைமேடைகளில் நின்றிருந்த மிகப்பெரிய மரங்களை வெட்டி சாய்த்து உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தெற்கு ரெயில்வே தனது டுவிட்டர் பதிவில், பொள்ளாச்சி-பாலக்காடு ரெயில் நிலையங்களுக்கு இடையே மின்மயமாக்கல் பணிகள் முடிந்துள்ளது. அதில் கேரளாவில் அமைந்துள்ள 'முதலமட' என்ற ரெயில் நிலையத்தில் மிகப்பெரிய ஆலமரத்தின் அழகான தோற்றம் என குறிப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டு இருந்தது. அதாவது அங்குள்ள மரத்தை வெட்டாமல் மின்பாதை அமைக்கப்பட்டதாக பெருமிதத்துடன் கூறப்பட்டுள்ளது. இது தென்காசி பகுதி பயணிகள் மட்டுமின்றி தமிழக பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தென்காசி பகுதி பயணிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அவர்கள் கூறியதாவது:-
தென்காசி சந்திப்பு ரெயில் நிலையத்தில் உள்ள பெரிய மரங்களை வெட்டாமல், மரங்களின் இருப்பிடங்களுக்கு தகுந்தாற்போல் மின்கம்பங்களை நிறுவி மின்கம்பிகளை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில் தென்காசி ரெயில் நிலையத்தில் 2 மற்றும் 3-வது நடைமேடையில் இருந்த அனைத்து மரங்களும் வெட்டி சாய்க்கப்பட்டன. ஆனால் கேரளாவில் உள்ள முதலமட ரெயில் நிலையத்தில் மட்டும் பயணிகளின் நலன் கருதி இயற்கையாகவே நிழல் தரும் பெரிய ஆலமரத்தை வெட்டாமல் மின்மயமாக்கல் பணிகள் மேற்கொண்டு உள்ளனர்.
கேரளாவுக்கு ஒரு நியாயம், தமிழ்நாட்டுக்கு ஒரு நியாயம் என்ற நிலையிலேயே அதிகாரிகள் செயல்பட்டு உள்ளனர். ஒரு மரத்துக்கு ஈடாக 10 மரக்கன்றுகள் நடப்படும் என்று ரெயில்வே சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. எனவே இதற்கு தீர்வாக தென்காசி ரெயில் நிலையத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் ரெயில்வே நிர்வாகம் அதிகமான மரக்கன்றுகளை உடனடியாக நடவு செய்து, அதை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.