ரூ.1 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ஈரோடு தொழில் அதிபரிடம் ரூ.25 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் மீட்டு கொடுத்தனர்
ரூ.25 லட்சம் மோசடி
ரூ.1 கோடி கடன் வாங்கி தருவதாக மெயில் அனுப்பி தொழில் அதிபரிடம் ரூ.25 லட்சம் மோசடி நடந்தது. அந்த பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு கொடுத்தனர்.
ரூ.25 லட்சம்
ஈரோட்டில் வசிக்கும் வடமாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் ெதாழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய நிறுவனத்தின் இ-மெயில் முகவரிக்கு ஒரு பிரபல நிறுவனத்தின் பெயரில் இருந்து போலியாக ஒரு மெயில் வந்தது. அந்த மெயிலில் உங்களுக்கு கடன் தேவைப்படுகிறதா? என்று கேட்டு உள்ளனர்.
தொழில் அதிபரும் தனது தொழிலை விரிவுபடுத்த ரூ.1 கோடி கடன் தேவை என்று கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து போலி மெயில் அனுப்பியவர்கள் தொழில் அதிபரிடம் தங்கள் நிறுவனம் தொடர்பான ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர். தொழில் அதிபரும் தனது நிறுவனத்தின் ஆவணங்களை அனுப்பி வைத்துள்ளார். அதைத்தொடர்ந்து மெயில் அனுப்பியவர்கள் ரூ.1 கோடி கடனுக்கு ரூ.25 லட்சம் நீங்கள் முன்பணம் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.
சைபர் கிரைம் போலீசார்
மேலும் அவர்கள், உங்களுக்கு ரூ.1 கோடி கடன் வரும் போது நீங்கள் செலுத்தும் முன்பணம் ரூ.25 லட்சமும் சேர்ந்து வந்து விடும் என்று தெரிவித்துள்ளனர். இதை உண்மை என்று நம்பிய தொழில் அதிபர் குறிப்பிட்ட ஒரு வங்கி கணக்கிற்கு ரூ.25 லட்சத்தை செலுத்தினார். ஆனால் அவர் கேட்ட கடன் தொகை கிடைக்கவில்லை. இதனால் அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
இதுகுறித்து அவர் ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஒரு வங்கிக்கு பணம் செலுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.
பணம் மீட்பு
மேலும் மர்ம நபர்கள் தொடர்பு கொண்ட சிம் கார்டு ஒடிசாவில் வாங்கி இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் மேற்கு வங்காளத்தில் உள்ள வங்கியை தொடர்பு கொண்டு, நடந்த விவரங்களை தெரிவித்தனர். அதன் பின்னர் ஈரோடு தொழில் அதிபர் செலுத்திய ரூ.25 லட்சம் மீண்டும் அவரது வங்கி கணக்குக்கு செலுத்தப்பட்டது.
சைபர் கிரைம் போலீசார் விரைந்து செயல்பட்டதால் தொழில் அதிபரின் பணம் உடனடியாக மீட்கப்பட்டது.