'மாண்டஸ்' புயல் கனமழை எதிரொலி: மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவுரை
‘மாண்டஸ்’ புயல் மழை காரணமாக மாவட்ட கலெக்டர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரைகள் வழங்கி உள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று 'மாண்டஸ்' புயல் காரணமாக கனமழை பெய்து வருவதையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சீபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி வாயிலாக கள நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், விழுப்புரத்தில் முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முகாம்களில் செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
கலெக்டர்களுக்கு அறிவுரை
பின்னர், மாவட்ட கலெக்டர்களுக்கு பின்வரும் அறிவுரைகளை வழங்கினார். அதன் விவரம் வருமாறு:-
* பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க பல் துறை மண்டலக் குழுக்கள் அமைக்க வேண்டும்.
* பலத்த காற்று காரணமாக விழும் மரங்களை உடனடியாக அகற்ற மர அறுப்பான்கள் மற்றும் இதர உபகரணங்களுடன் நடமாடும் குழுக்கள் அமைக்கவும், போதுமான அளவு உபகரணங்களை வைத்திருக்க வேண்டும்.
* பாதிப்புக்குள்ளாகக்கூடிய இடங்களில் முன்கூட்டியே தேவையான படகுகள், உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும்.
* மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தேவையான மருந்துகள்
* அனைத்து துறை அலுவலர்களும் தலைமை இடத்தில் இருக்க வேண்டும்.
* மின் கம்பங்கள், மின் கடத்திகள் ஆகியவற்றின் இருப்பு வைத்திருப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகும் மின் இணைப்புகளை சீரமைக்க குழுக்கள் அமைக்க வேண்டும்.
* மணல் மூட்டைகள், கம்பங்கள், அவசரகாலத்தில் தேவையான மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும்.
* பாதிப்பிற்குள்ளாகும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
* நிவாரண முகாம்களை தயாராக வைத்திருப்பதோடு, குடிநீர், கழிவறை வசதிகள் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
* தங்குதடையின்றி குடிநீர் வழங்குவதற்கு போதுமான ஜெனரேட்டர்கள் வைத்திருக்க வேண்டும்.
* பேரிடர் பாதிப்பிற்குள்ளாகும் இடங்களுக்கும், நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் சீரான போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள்
* பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நபர்களுக்கும், பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் உணவு அளிக்கும் வகையில் சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
* அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உபரிநீர் வெளியேற்றும் போது பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க வேண்டும்.
* நெடுஞ்சாலை, நீர்வள ஆதாரத்துறை, மின் வாரியம், தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட துறைகள் களப்பணியாற்ற தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினார்.