தீவிரமடைந்த மிக்ஜம் புயல்.. 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் தீவிர புயலாக வலுப்பெற்று சென்னையை நெருங்கியிருக்கிறது. இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. சென்னையின் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியிருக்கிறது.
புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை நீடித்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் நிலவரப்படி சென்னைக்கு வட கிழக்கே 90 கி.மீ. தொலைவில் மிக்ஜம் புயல் நிலைகொண்டிருந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று வரை 60 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.