ரூ.6¼ கோடியில் புயல் பாதுகாப்பு மையம்
நாகை நம்பியார் நகரில் ரூ.6¼ கோடியில் புயல் பாதுகாப்பு மையம் கட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் அடிக்கல் நாட்டினார்.
நாகை நம்பியார் நகரில் ரூ.6¼ கோடியில் புயல் பாதுகாப்பு மையம் கட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் அடிக்கல் நாட்டினார்.
புயல் பாதுகாப்பு மையம்
நாகை நம்பியார் நகரில் ரூ.6 கோடி 35 லட்சம் மதிப்பீட்டில் புயல் பாதுகாப்பு மையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி, பூமி பூஜையை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ., தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது கலெக்டர் பேசியதாவது:-
நாகை நம்பியார் நகரில் பேரிடர் மீட்பு மைய (புயல் பாதுகாப்பு மையம்) கட்டிடம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.6 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இதற்காக நம்பியார் நகரில் 4 ஆயிரத்து 50 சதுர மீட்டர் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
விழாக்கள் நடத்தும் வகையில்...
புயல் பாதுகாப்பு மையத்தின் தரைதளத்தில் தங்கும் இடம், உணவு கூடம், அலுவலகம், மின் அறை, சமையல் கூடம், கழிவறை, முதல் தளத்தில் தங்குமிடம், விழா கூடம், பாதுகாப்பு அறை மற்றும் கழிவறை வசதிகள் அமைக்கப்பட உள்ளன.
மேலும் வாகன நிறுத்தும் வசதிகள், கால்நடைகளுக்கான கூடாரம், சுற்றுச்சுவர் மற்றும் மதகுப்பாலம் வசதிகளுடன் ஆயிரம்பேர் தங்கும் வகையிலும், விழாக்கள் நடத்தும் வகையிலும் கட்டப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ரேஷன் கடை
இதைத் தொடர்ந்து நாகை அருகே பெருங்கடம்பனூர் ஊராட்சியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடையை கலெக்டர் அருண்தம்புராஜ், முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ., தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, நகரசபை தலைவர் மாரிமுத்து, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அருள்அரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.