1,663 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்


1,663 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்டத்தில் 8 பள்ளிகளில் படிக்கும் 1,663 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

காலை உணவு திட்டம்

திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் திருப்பூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி பேசியதாவது:-

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணமில்லா பஸ் பயண அனுமதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பதற்காக மாதம் ரூ.1,000 வழங்கும் புதுப்பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். படிக்கும் காலத்தில் மாணவர்களின் திறனை வெளிக்கொண்டுவரும் வகையில் நான் முதல்வன் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவும், காலை உணவு திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 77 அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 1,429 மாணவ-மாணவிகள் பயன்பெறுவார்கள்.

1,663 பேருக்கு விலையில்லா சைக்கிள்

நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 399 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 137 மாணவர்கள், 9 ஆயிரத்து 643 மாணவிகளுக்கு என 17 ஆயிரத்து 780 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.9 கோடியாகும். மீதம் உள்ள 14 ஆயிரத்து 732 பேருக்கு விரைவில் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

மாவட்டத்தில் மொத்தம் 8 பள்ளிகளை சேர்ந்த 1,663 மாணவ-மாணவிகளுக்கு ரூ.85 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் குணசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், கவுன்சிலர்கள் திவாகரன், செந்தில்குமார், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story