டி.மேலக்கடை மகாமாரியம்மன் கோவில் பால்குட திருவிழா
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான டி.மேலக்கடை மகாமாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குத்தாலம்:
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான டி.மேலக்கடை மகாமாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மகாமாரியம்மன் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான டி.மேலக்கடை தெருவில் பிரசித்தி பெற்ற மகா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பால்குட மகா உற்சவம் 7-ந் தேதி(வெள்ளிக்கிழமை) கணபதி ஹோமம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான பால்குட திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனையொட்டி காவிரி ஆற்றங்கரையில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்து பால்குடம் மற்றும் காவடி உற்சவமானது தொடங்கியது.கரக உற்சவம் முன் செல்ல ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு உகந்த மஞ்சள் நிற உடை உடுத்தி முக்கிய வீதிகள் வழியாக மேள வாத்தியங்கள் முழங்க கோவிலை சென்றடைந்தனர்.
பாலபிஷேகம்
அங்கு அம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலினை கொண்டு பாலபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அம்பாள் வீதியுலா காட்சி மற்றும் ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில் நாளை கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை டீ மேலக்கடை கிராமமக்கள், ஊர் முக்கியஸ்தர்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.