தாத்தியம்பட்டி காலனிக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பஸ் மீண்டும் இயக்கம்
தாத்தியம்பட்டி காலனிக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பஸ் மீண்டும் இயக்கப்பட்டன.
ஓமலூர்:
ஓமலூரில் இருந்து தாத்தியம்பட்டி காலனி வரை குட்டக்காடு, பல்பாக்கி, மொரப்பம்பட்டி வழியாக அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அவதி அடைந்தனர். இதனால் மீண்டும் அரசு பஸ்சை இயக்க வேண்டும் என்று கூறி பொதுமக்கள், ஊராட்சி நிர்வாகம் மற்றும் இந்திய குடியரசு கட்சியினர் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாததால், சேலம் போக்குவரத்து கழக பணிமனை முன்பு இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த அரசு போக்குவரத்து பணிமனை கோட்ட மேலாளர் மகேந்திரன், ஓமலூர் போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் செந்தில் மற்றும் போக்குவரத்து துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் நிறுத்தப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இந்தநிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பஸ் தாத்தியம்பட்டி காலனிக்கு மீண்டும் இயக்கப்பட்டது. அந்த பஸ்சை இந்திய குடியரசு கட்சி மாநில செயல் தலைவர் கருமலை, தாத்தியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.