நாய்-பாம்பு கடிக்கு தினந்தோறும் ஊசி போட வேண்டும்
திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாய்-பாம்பு கடிக்கு தினந்தோறும் ஊசி போட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவெண்காடு:
திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாய்-பாம்பு கடிக்கு தினந்தோறும் ஊசி போட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆரம்ப சுகாதார நிலையம்
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு பூம்புகார், திருவெண்காடு ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள 20 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த சுகாதார நிலையம் சீர்காழி வட்டார சுகாதார துறைக்கு தலைமை இடமாக இயங்கி வருகிறது. இந்த சுகாதார நிலையம் மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில் சார்ந்த பகுதியாக விளங்கி வருகிறது.
நாய்-பாம்பு கடிக்கு ஊசி
இந்த சுகாதார நிலையில் நாய்க்கடி மற்றும் பாம்பு கடிக்குவாரந்தோறும் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டுமே ஊசி போடப்படுகிறது. மற்ற நாட்களில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பல கிலோ மீட்டர் கடந்து சீர்காழி மற்றும் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளிகள் அதிகம் வசிக்கும் திருவெண்காடு பகுதியில் விவசாய நிலங்களில் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களை அடிக்கடி பாம்பு கடித்து விடுகிறது. உடனே பாதிக்கப்பட்டவர்களை திருவெண்காடு அரசு சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தால் இதற்கான ஊசி திங்கள் மற்றும் வியாழக்கிழமை மட்டுமே போடப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.
தினந்தோறும் போட வேண்டும்
இந்த இரண்டு நாட்களை தவிர மற்ற நாட்களில் வரும் நோயாளிகள் சீர்காழி மற்றும் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே திருவெண்காடு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் தினந்தோறும் பாம்பு கடி மற்றும் நாய்கடிக்கு ஊசி மற்றும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.