கோவில்பட்டி கூடுதல் பஸ்நிலையத்துக்கு மாற்றப்படும் தினசரி சந்தை; கனிமொழி எம்.பி. ஆய்வு


கோவில்பட்டி கூடுதல் பஸ்நிலையத்துக்கு மாற்றப்படும் தினசரி சந்தை; கனிமொழி எம்.பி. ஆய்வு
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி கூடுதல் பஸ்நிலையத்துக்கு தினசரி சந்தை மாற்றப்படுகிறது. இதனை கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி கூடுதல் பஸ்நிலையத்திற்கு நகராட்சி தினசரி சந்தை மாற்றப்படுகிறது. இதனை முன்னிட்டு கூடுதல் பஸ்நிலையத்தில் கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தார்.

தினசரி சந்தை

கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தை ரூ.6 கோடியே 84 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அங்குள்ள வியாபாரிகளுக்கு மாற்று இடம் தருவது தொடர்பாக நகரில் பல இடங்கள் ஆலோசிக்கப் பட்டது.

இறுதியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூடுதல் பஸ் நிலையத்தில் இடம் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா காலத்தில் அங்கு தினசரி சந்தை செயல்பட்ட காரணத்தினால் மீண்டும் அந்த இடத்தை ஒதுக்கீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

கனிமொழி எம்.பி. ஆய்வு

இந்நிலையில் நேற்று கூடுதல் பஸ்நிலையத்தை கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தார். வியாபாரிகளுக்கு அனைத்து வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய அறிவுறுத்தினார்.

இதை தொடர்ந்து அவர் கூறுகையில், "நகராட்சி தினசரி சந்தை புதுப்பிக்கப்பட உள்ளதால் அங்குள்ள வியாபாரிகளுக்கு கூடுதல் பஸ் நிலையத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். தினசரி சந்தை புதுப்பிக்கப்பட்ட பின்னர் அங்கு அவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும்" என்றார்.

ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, தாசில்தார் சுசீலா, நகராட்சி பொறியாளர் ரமேஷ், நகர அமைப்பு அலுவலர் ரமேஷ் குமார், சுகாதார அலுவலர் நாராயணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story