'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 21 Aug 2023 1:15 AM IST (Updated: 21 Aug 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

நடைபாதை வசதி வேண்டும்

கொடைக்கானல் தாலுகா பள்ளங்கி அன்புநகர் பகுதியில் நடைபாதை வசதி இல்லை. இதனால் மலைக்கிராம மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். பாதை வசதி இல்லாததால் பள்ளங்கி பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு கூட சிரமப்பட்டு செல்லும் நிலை உள்ளது. எனவே பாதை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

-ஜெயராம், மேட்டுப்பட்டி.

நூலக வசதி செய்யப்படுமா?

அய்யலூரில் நூலகம் இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், போட்டி தேர்வுக்கு தயாராகுபவர்கள் பக்கத்து ஊர்களில் செயல்படும் நூலகங்களுக்கு சென்று புத்தகங்களை படிக்கும் நிலை உள்ளது. எனவே அய்யலூரில் நூலகம் அமைக்க வேண்டும்.

-ஜெரால்டு, வக்கம்பட்டி.

சேதமடைந்த சாலை

நிலக்கோட்டை தாலுகா மட்டப்பாறை பாலத்தில் இருந்து விளாம்பட்டி செல்லும் சாலை சேதமடைந்து வருகிறது. சாலையில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

-முருகன், தாதன்குளம்.

பயணிகள் நிழற்குடை வேண்டும்

சித்தையன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அபி, சித்தையன்கோட்டை.

முறிந்து விழும் நிலையில் மின்கம்பம்

உத்தமபாளையம் தாலுகா கோகிலாபுரம் ஊராட்சி மேற்கு தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிவதால் எந்த நேரத்திலும் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.

-செல்வராஜ், கோகிலாபுரம்.

செயல்படாத ஆரம்ப சுகாதார நிலையம்

புதுச்சத்திரம் ஊராட்சி கம்பளிநாயக்கன்பட்டி துணை ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக பக்கத்து ஊர்களில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

-ரங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.

தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்

உத்தமபாளையம் கோட்டைமேடு தெருவில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்குவதால் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைவாக தூர்வார வேண்டும்.

-பக்ருதீன், உத்தமபாளையம்.

பஸ் நிலையத்தில் பயணிகள் அவதி

போடி பஸ் நிலையம் திறந்தவெளியாக இருக்கிறது. மேற்கூரை அமைக்கப்படவில்லை. இதனால் கொளுத்தும் வெயிலில் பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே பஸ் நிலையத்தில் மேற்கூரை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணிவேல்ராஜ், போடி.

குடிநீர் தட்டுப்பாடு

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் பொம்மிநாயக்கன்பட்டியில் 10 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போதுமான அளவு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே குடிநீரை சீராக வினியோகிக்க வேண்டும்.

-மணி, பொம்மிநாயக்கன்பட்டி.

-----------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

-------------


Related Tags :
Next Story