தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

சாக்கடையாக மாறிய வடிகால் வாய்க்கால்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் நகரில் கடந்த 2015-ம் ஆண்டில் நெடுஞ்சாலைத்துறையால் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றன. அப்போது சாலையோரத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டது. அந்த வாய்க்காலில் சில தனிநபர் வீடுகளில் இருந்து கழிவுநீர் தொட்டி கழிவுகள் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வடிகால் வாய்க்கால்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து துவங்கி சரியான முடிவு பகுதி அமைக்கப்படாமல் ஆங்காங்கே துண்டுத்துண்டாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தொட்டி கழிவுகள் வாய்க்கால்களில் ஆங்காங்கே நீண்டகாலமாக தேங்கி சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகிறது. எனவே எந்த வகையிலும் பயன் இல்லாமல் இருக்கும் மழைநீர் வடிகால் அமைப்பினை மண் கொட்டி அடைத்து கழிவுநீர் தொட்டி கழிவுகளை வடிகால் வாய்க்காலில் இணைத்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தா.பழூர், அரியலூர்.

குண்டும், குழியுமான சாலை

பெரம்பலூர் காமராஜர் வளைவில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

கரூர் மாவட்டம், கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள புகழூர் வாய்க்கால் ஓரத்தில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கடைக்காரர்கள் கடையில் உள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை கொட்டி வருகின்றனர். இந்த பிளாஸ்டிக் கழிவுகள் அருகிலுள்ள வாய்க்காளுக்குள் விழுந்து வருகிறது. இதனால் வாய்க்காலில் உள்ள கழிவுநீரில் செல்லவழியின்றி தேங்கி நின்று துர்நாற்றமும் ஏற்பட்டுள்ளது. மேலும் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சரவணன், பாலத்துறை, கரூர்.

விபத்து ஏற்படும் அபாயம்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலாப்பழங்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இப்பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகளிடம் இருந்து நேரடியாகவும் ஒத்திகை மற்றும் குத்தகை முறையில் பலாப்பழங்களை வாங்கி செல்லும் வியாபாரிகள் அவற்றை கூலி தொழிலாளர்கள் மூலமாக பலா மரங்களில் இருந்து பறித்து, அவற்றை சரக்கு லாரிகளில் ஏற்றி சென்று விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு சரக்கு லாரிகள் மூலமாக பலாப்பழங்களை ஏற்றி செல்லும்போது சரக்கு லாரிகளில் தொழிலாளர்களையும் ஏற்றி செல்வதால் ஏதேனும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வடகாடு, புதுக்கோட்டை.


Next Story