தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் மாடுகளும், திருச்சி-புதுக்கோட்டை சாலையில் ஆடுகளும் கூட்டம், கூட்டமாக போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிகிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்
சகானா, திருச்சி.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாநகராட்சி 65- வது வார்டு விமான நிலையத்தில் இருந்து குளாப்பட்டிக்கும் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்லும் பொதுமக்களும் கடும் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், குளாப்பட்டி, திருச்சி.
மேம்பாலம் கட்ட கோரிக்கை
திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா , துவரங்குறிச்சி அருகே உள்ள செட்டியபட்டி கிராமத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் கட்டப்பட்டது. தற்போது மழை பெய்து வருவதால் அந்த வழியாக வாகனங்களில் செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே தரைப்பாலத்தின் மேல்பகுதியில் மேம்பாலம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சிவா, செட்டியபட்டி, திருச்சி.
சாலையில் தேங்கும் கழிவுநீர்
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் வேங்கைகுறிச்சி கிராமம் இடையப்பட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் வடிகால் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜோதி, வேங்கைகுறிச்சி, திருச்சி.