தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலை பணியால் விபத்து அபாயம்
திருச்சி புதுக்கோட்டை சாலை அகலப்படுத்தும் பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. பணிகள் மந்தமாக நடைபெறுவதாலும், அகலப்படுத்தும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தடுப்புகள் வைக்காமல் உள்ளதாலும் விபத்து அபாயம் உள்ளது. பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வைதேகி, திருச்சி.
முழு நேர ரேஷன் கடைவேண்டும்
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் கீழக்குன்னுப்பட்டியில் தற்போது 600 குடும்ப அட்டைகள் (ரேஷன்கார்டு) உள்ளது. இதனால் கடையில் பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை. தற்போது வரை ரேஷன் கடை பகுதிநேரமாகவே செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி இந்த கடையை முழு நேர ரேஷன் கடையாக தரம் உயா்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்கிறோம்.
கார்த்திக், கீழக்ககுன்னுப்பட்டி, திருச்சி.
அரசு பள்ளியை தரம் உயர்த்த கோரிக்கை
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் தும்பளம் பெருமாள்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளி செயல்படுகிறது. இந்தப் பள்ளியில் அதிக மாணவர்கள் பயில்கின்றனர். இப்பள்ளியில் விளையாட்டு மைதானமும் இல்லை. இதனால் மாணவர்களின் நலன் கருதி இப்பள்ளியை ஸமார்ட் பள்ளியாக தரம் உயர்த்த சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
கோவிந்தம்மாள்,பெருமாள்பாளையம், திருச்சி.