தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குறுகிய பாலம் அகலப்படுத்தபடுமா?
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே மரவாபாளையம் பகுதியில் புகழூர் வாய்க்கால் குறுக்கே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்லக்கூடிய அளவிலான குறுகிய சிறிய பாலம் கட்டப்பட்டது. அந்த வழியாக அங்குள்ள பொதுமக்கள், விவசாயிகள் இரு சக்கர வாகனங்களிலும், நடந்தும் சென்று வருகின்றனர். விளைபொருட்களையும், இடுபொருட்களையும் இந்த பாலத்தின் வழியாக கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சிறிய அளவிலான பாலத்தை பெரிய அளவிலான பாலமாக மாற்றி நான்கு சக்கர வாகனம் செல்லும் அளவிற்கு பாலத்தை அமைத்து தர வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கரூர்.
நாய்கள் தொல்லை
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிகிறது. இந்தநிலையில் சாலையில் செல்லும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் வரை பின்னால் துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. மேலும் சாலைகளின் குறுக்கே நாய்கள் ஓடி செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கரூர்.