'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு

தென்காசியில் இருந்து அம்பை செல்லும் சாலையில் பொட்டல்புதூர் மேல பஸ்நிறுத்தம் அருகில் (முக்கூடல் வழியாக) நெல்லைக்கு சாலை பிரிந்து செல்கிறது. அங்குள்ள விலக்கு பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டு உள்ளது. பல மாதங்களாக சாலையோர மரக்கிளைகள் அதிக அளவில் வளர்ந்து அந்த வழிகாட்டி பலகையை சூழ்ந்து காணப்படுவதாகவும், இதனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் சிரமப்படுவதாகவும் கடையம் முதலியார்பட்டியை சேர்ந்த அம்ஜத் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் நேற்று முன்தினம் செய்தியாக பிரசுரமானது. அதற்கு உடனடி தீர்வாக மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

சாலை வசதி வேண்டும்

பாளையங்கோட்டை சாந்திநகர் அருகே சீவலப்ேபரி ரோட்டில் அமைந்துள்ளது கிருபாநகர். இங்கு சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 7 வருடங்களாக மெயின் ரோட்டில் இருந்து கிருபாநகருக்கு உள்ளே வரும் சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழைக் காலத்தில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, சாலையை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

தட்சிணாமூர்த்தி, கீழநத்தம்.

பராமரிப்பில்லாத குப்பைத்தொட்டி

நெல்லை மாவட்டம் அம்பை தாலுகா வெள்ளங்குளி கிராமத்தில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டி முறையான பராமரிப்பு இல்லாமல் உபயோகப்படுத்த இயலாத நிலையில் பயனற்று கிடக்கிறது. அதன் காரணமாக குப்பைகள் அனைத்தும் சாலைகளிலேயே கொட்டப்படுவதால் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனை சரிசெய்ய பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜகுமாரன், வெள்ளங்குளி.

மின்விளக்கு வசதி

மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி கடம்பன்குளம் கிராமத்தின் வடக்கு புறநகர் பகுதியில் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் குடிநீர் பிடிப்பதற்கான சின்டெக்ஸ் தொட்டி அமைந்துள்ளது. ஆனால், ஊரின் முகப்பில் இருந்து குடிநீர் தொட்டி அமைந்துள்ள பகுதி வரை போதிய மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரத்தில் தண்ணீர் பிடிக்க வரும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகிறார்கள். எனவே, மின்விளக்கு வசதி செய்து கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மணிகண்டன், கடம்பன்குளம்.

சாலையை தொடும் ஆலமர விழுதுகள்

தென்காசி- குற்றாலம் சாலையின் வலதுபுறமும், இடதுபுறமும் சில இடங்களில், ஆலமர விழுதுகள் பெரிதாக வளர்ந்து சாலையை தொடும் அளவிற்கு தொங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் நடந்து செல்லும் பொதுமக்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டியுள்ளது. மேலும் விபத்துகள் நடப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, சாலையை தொடும் ஆலமர விழுதுகளை வெட்டி அப்புறப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

அம்பலவாணன், குற்றாலம் குடியிருப்பு.

குண்டும் குழியுமான சாலை

தூத்துக்குடி மாவட்டம் சோ்வைக்காரன்மடம் பஞ்சாயத்து செந்தியம்பலம் நம்மாழ்வார்நகர் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

ஆனந்தராஜ், செந்தியம்பலம்.

மின்விளக்கு எரியுமா?

ஆழ்வார்திருநகரி யூனியன் மூக்குப்பீறி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஞானராஜ்நகரில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக 10-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, மின்விளக்கு எரிவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

வின்சென்ட், ஞானராஜ்நகர்.

பெயர் இல்லாத வழிகாட்டி பலகை

கோவில்பட்டி ரெயில்வே மேம்பாலம் கீழ்பகுதியில் இலுப்பையூரணி செல்லும் சாலையில் வழிகாட்டி பலகை உள்ளது. ஆனால், அந்த பலகையில் பெயர் பொறிக்கப்படாமல் சாய்ந்து கிடக்கிறது. இதனால் வழிதெரியாமல் மக்கள் குழப்பம் அடைகின்றனர். எனவே, வழிகாட்டி பலகையில் பெயர் பொறிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நேதாஜி பாலமுருகன், கோவில்பட்டி.


Next Story