தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே ஓலப்பாளையத்தில் பொதுமக்களின் நலன் கருதி குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தொட்டியின் அடியில் உள்ள தூண்களின் கான்கிரீட் கீழே விழுந்து வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் குடிநீர் மேல்நிலை தொட்டி கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த குடிநீர் மேல்நிலை தொட்டியின் அடியில் உள்ள தூண்களை சீரமைத்து விபத்தினை தடுக்க வேண்டும் என தினத்தந்தி நாளிதழில் செய்தி பிரசுரம் செய்யப்பட்டது. செய்தியை அறிந்த உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் மேல்நிலை தொட்டியின் அடியில் உள்ள தூண்களை கான்கிரீட் கலவைகள் மூலம் சீரமைத்து வருகின்றனர். செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கும், அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், ஓலப்பாளையம், கரூர்.
ஆபத்தான மின்கம்பம்
கரூர் மாவட்டம், புகழூர் ரெயில்வே கேட்டில் இருந்து புகழூர் காகித ஆலை குடியிருப்பு பகுதிக்கு பின்புறம் வழியாக கரைப்பாளையம் செல்லும் தார் சாலை ஓரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு மின் கம்பம் நடப்பட்டது. அந்த மின் கம்பத்தில் இருந்து அருகாமையில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் மின் கம்பத்தில் உள்ள சிமெண்டு பூச்சுக்கள் உதிர்ந்து கீழே விழுந்து கம்பிகள் தெரிகிறது. இதனால் எந்த நேரத்திலும் மின்கம்பம் தார் சாலையில் விழுந்து பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி விபத்தை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கந்தசாமி, கரைப்பாளையம், கரூர்.