தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

கிடப்பில் போடப்பட்ட சிமெண்டு சாலை பணி

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சி வடக்குவீதி முன்சிப் தெரு மற்றும் காதரப்பா தெருவிற்கு சிமெண்டு சாலை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். மேலும் ஊராட்சி மன்ற கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால் இதுவரை எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலைவசதி செய்யப்படாததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ரகுமத்துல்லா, முக்கண்ணாமலைப்பட்டி, புதுக்கோட்டை.

ஆபத்தான மின்கம்பம்

புதுக்கோட்டை நகராட்சி பாலாஜி நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்ய சாலையோரத்தில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாலாஜி நகர் சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுக்கள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. சாலையில் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிர் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

பெரியசாமி, புதுக்கோட்டை.


Next Story