தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
கொடி அகற்றப்பட்டது
குலசேகரம்-திற்பரப்பு சாலையில் கான்வென்ட் சந்திப்பு அருகே ஒரு மின்கம்பத்தில் மின்கம்பியில் கொடிகள் படர்ந்த நிலையில் காணப்பட்டது. இதனால் காற்று வீசும் போது பல நேரங்களில் மின்தடை ஏற்பட்டது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பியில் படர்ந்திருந்த கொடியை அகற்றினர். செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.
பஸ்சை சீராக இயக்க வேண்டும்
திங்கள்நகரில் இருந்து நடுவூர்கரை, மணவாளக்குறிச்சி, வடக்கு கன்னக்குறிச்சி, ராஜாக்கமங்கலம், கோணம் வழியாக நாகர்கோவிலுக்கு 12 எல்.வி. என்ற பஸ் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் சில சமயங்களில் இந்த பஸ் வேறு வழிதடத்தில் இயங்குகிறது. இதனால் அந்த பஸ்சை நம்பியுள்ள தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே பஸ்சை சீராக இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆல்வின், வடக்குகன்னக்குறிச்சி.
வடிகால் ஓடை வேண்டும்
பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளை ஆசாத் நகரில் உள்ள தெருவில் வடிகால் ஓடை வசதி இல்லை. மழை காலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் வடிகால் ஓடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.முகமது ரபீக், திட்டுவிளை.
குப்பைகளை அகற்ற வேண்டும்
கரியமாணிக்கபுரம்-ஆஸ்ராமம் இடையே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் இருபுறமும் சிலர் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே குப்பை கொட்டுவதை தடுக்கவும், அங்குள்ள குப்பைகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.உலகப்பன், கரியமாணிக்கபுரம்.
கால்வாய் தூர்வாரப்படுமா?
பைங்குளம் ஊராட்சிக்குட்பட்ட காட்டுவிளை, பருத்திவிளை, அனந்தமங்கலம், காக்கறவிளை வரை கால்வாய் புனரமைப்பு பணிகள் நடைபெறுவதாக காக்கறவிளையில் கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதனால் கால்வாய் புதர்மண்டியும், மண் நிரம்பியும் கழிவுநீர் ஓடை போல் தண்ணீர் செல்ல முடியாத நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?
-தாசன், தேங்காப்பட்டணம்.
சாலையை சீரமைக்க வேண்டும்
ராஜாக்கமங்கலம் சந்திப்பில் இருந்து ஈத்தாமொழி திரும்பும் திருப்பத்தில் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.நாகராஜன், ராஜாக்கமங்கலம்..