தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பூட்டிக்கிடக்கும் கால்நடை மருத்துவமனை
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் வெற்றியூர் ஊராட்சி விரகாலூர் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டது. ஆனால் இந்த மருத்துவமனை பயன்பாடு இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. தற்போது இந்த கட்டிடம் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், விரகாலூர், அரியலூர்.
சேறும், சகதியுமான சாலை
அரியலூர் வட்டம் கடுகூர் கிராமம் தெற்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான தார் சாலை வசதி இல்லாததால் மழை பெய்யும் போது இப்பகுதியில் உள்ள மண் சாலைகள் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கடுகூர், அரியலூர்.
எரியாத மின் விளக்குகள்
திருச்சி சிதம்பரம் சாலை விரிவாக்கப்பணி நடைபெறுகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி பகுதியில் மேம்பாலம் அமைத்து வேலை முடிவுற்ற நிலையில் அந்த மேம்பாலத்தில் இருபுறமும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. அப்படியே எரிந்தாலும் அதிகாலை 4 மணிக்கெல்லாம் நிறுத்தி விடுகின்றனர். இதனால் இரவு நேரத்தில் இந்த பகுதியில் செல்ல பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மூர்த்தி, வி.கைகாட்டி, அரியலூர்.