தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கும்பாபிஷேகம் நடத்தப்படுமா?
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கொப்பம்பட்டி கிராமத்தில் மிக பழமையான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுமார் 20 ஆண்டுகள் முன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதுவரை கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் இதில் உடனே தலையிட்டு சிவன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பிரபு, கொப்பம்பட்டி, திருச்சி.
பாலத்தில் பள்ளம்
திருச்சி-முசிறி சாலையில் முக்கொம்பு வாத்தலை அருகே பாலத்தின் மேல் சாலையில் சிதிலமடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் வாகனங்களின் டயர்கள் பஞ்சர் அடையும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு கீழே விழுந்து காயம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், முக்கொம்பு, திருச்சி.
பேரிகாடு அமைக்க வேண்டும்
திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் சாலையை அகலமாக்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. குண்டூர் பகுதியிலிருந்து திருச்சி நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் புதுக்கோட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் அதிவிரைவான வேகத்தில் செல்கின்றன. இதனால் குண்டூர் பொதுமக்கள் சாலையைக் கடக்க வெகுநேரம் ஆகின்றது. இதனை போக்க குண்டூர் பஸ் நிலையம் மற்றும் எம்.ஐ.இ.டி. பஸ் நிலையம் அருகில் இரு பக்கங்களிலும் சாலைகளில் பேரிகாடு வைக்கப்பட வேண்டும். மேலும் குண்டூரில் உள்ள ஐ.டி.பார்க் சாலை தேசிய நெடுஞ்சாலையாகும். இச்சாலையில் வாகனங்கள் அதிவேகமாகவே செல்கின்றன. அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, அய்யனார் கோவில் அருகில் வடக்கு மற்றும் தெற்கு சாலைகளில் பேரிகாடு வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நெடுஞ்செழியன், குண்டூர், திருச்சி
ஆபத்தான மின்கம்பம்
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, முள்ளிப்பட்டி பகுதியில் மின்சாரம் வினியோகம் செய்ய சாலையோரத்தில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுக்கள் உதிர்ந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், முள்ளிப்பட்டி, திருச்சி.