'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் வட்டம் அரசந்தம்பட்டி கிராமத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் அந்த வழியாக செல்ல முடியவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அரசந்தம்பட்டி, புதுக்கோட்டை.
குரங்குகளால் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியம் அரிமளம் சிவன் கோவில் பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து வீட்டில் வைத்திருக்கக்கூடிய திண்பண்டங்கள், மளிகை பொருட்களை எடுத்துச்சென்று விடுகின்றன. அதுமட்டும் இன்றி வீடுகளில் வைத்திருக்கும் பொருட்களை ஆங்காங்கே சிதறவிட்டுவிட்டு சென்றுவிடுகிறது. மேலும் குழந்தைகளை கடிக்க வருவது போல் பயமுறுத்துகின்றன. எனவே இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் உள்ள குரங்குகளை பிடித்து சென்று வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அரிமளம், புதுக்கோட்டை.