தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மண் சாலை மாற்றப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம் புலியூரில் இருந்து களரிப்பட்டி, உறவிக்காடு ,செட்டிப்பட்டி வழியாக திருவெறும்பூரை இணைக்கும் மண் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண் சாலையை மாற்றி புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், குளத்தூர்.
உயர்கோபுர மின்விளக்கு அமைக்க கோரிக்கை
புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி, அறந்தாங்கி செல்லும் இணைப்புச் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. தற்போது அப்பகுதியில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இணைப்பு சாலையில் உயர்மின்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், புதுக்கோட்டை.