தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சுகாதார சீர்கேடு
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் கிராமத்தில் 5 மற்றும் 6-ம் வார்டுகளுக்கு இடையே பிரதான சாலையின் ஒருபுறம் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. ஆனால் மறுபுறம் கழிவுநீர் கால்வாய் அமைக்காமல் அந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் புகுந்து விடுகிறது. மேலும், அதன் அருகே உள்ள மற்றொரு கால்வாயில் குப்பைகள் தேங்கி இருப்பதால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வராஜூ, பெரம்பலூர்.
ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
அரியலூா் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் கார்குடி கிராம் சுத்தமல்லியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பரளவில் நீர்தேக்க ஏரியில் கீழ்புறமும், தென்புறமும் கரை உள்ளது. ஆனால் வடபுறம் மற்றும் மேல்புறத்தில் கரை கிடையாது. வடபுறம் மற்றும் மேல்புறம் பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த ஏரியில் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் விவசாய நிலங்களுக்கு செல்ல பாதையில்லாமல் சிரமம் அடைந்து வருகின்றனா். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கார்குடி, அரியலூர்.