தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பஸ்சுக்காக காத்திருக்கும் மாணவர்கள்
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள ஆலங்காடு மற்றும் பள்ளத்துவிடுதி பகுதிகளில் இருந்து தினந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் அரசு பஸ் தடம் எண் 3-யை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பஸ் புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி, பள்ளத்துவிடுதி, ஆலங்காடு வழியாக கொத்தமங்கலம் வரை செல்லும். ஆனால் முறையாக பஸ் இயக்கப்படாததால் ஆலங்காடு போன்ற பகுதிகளில் இருந்து மாணவர்கள் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை பள்ளிகளுக்கு நடந்தே செல்லும் நிலையும் ஏற்படுகிறது. சில நேரங்களில் மாணவர்கள் மணிகணக்கில் காத்தும் கிடக்கின்றனர். மேலும் கல்லூரி செல்லும் மாணவர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து பலமுறை போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அரசு பஸ்சை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், புதுக்கோட்டை.
எரியாத உயர்மின் கோபுரவிளக்கு
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை மடத்துக்கடையில் உள்ள உயர்மின் கோபுர விளக்கு கடந்த 6 மாதங்களுக்கு மேல் எரியாமல் உள்ளது. இந்த இடம் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் கடைவீதிக்கு அதிகமானோர் வந்து செல்கின்றனர். வெளியூர்களுக்கு வேலை நிமித்தமாக பஸ்களில் சென்று வரும் பெண்கள் இரவு நேரங்களில் அச்சத்துடனேயே செல்கின்றனர். பொதுமக்கள் மடத்துக்கடை சாலையினை கடக்கும்போது இரவு நேரங்களில் அதிக விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் உடனடியாக பழுதடைந்துள்ள உயர்மின் கோபுர விளக்கினை சீரமைத்து ஒளிரச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், மடத்துக்கடை, புதுக்கோட்டை.