தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருநாய்களால் தொல்லை
திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, தொப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆளிபட்டி மேற்கு தெருவில் தெருநாய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை கூட்டமாக சாலையில் நின்றுகொண்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு சாலையின் குறுக்கே திடீரென ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதனால் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதற்கு பெரிதும் பயமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பாண்டியன் தொப்பம்பட்டி, மணப்பாறை.
ஆபத்தான மின்கம்பம்
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட செட்டியாபட்டி மெயின் ரோடு கிருஷ்ணவேணி நகரில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் நடப்பட்டு 2 ஆண்டுகளுக்கு முன்பு பழுதானது. தற்போது சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், செட்டியாபட்டி. திருச்சி
கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் 3-வது வார்டுக்கு உட்பட்ட நரியன் தெரு பகுதியில் சாக்கடையில் கோரைப்புற்கள் அதிகமாக வளர்ந்துள்ளது. மேலும் ஏராளமான குப்பைகளும் குவிந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. எஉவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
ஹரிகரசுதன், நரியன்தெரு, ஸ்ரீரங்கம்.