தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
காட்சிபொருளான தண்ணீர் தொட்டி
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள காட்டுக்கொல்லை கிராமத்தில் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி உள்ளது. கடந்த சில மாதங்களாக இதில் தண்ணீர் வராததால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும் அந்த தண்ணீர் தொட்டி காட்சி பொருளாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதி மக்களின் நலன் கருதி இந்த தண்ணீர் தொட்டியில் சரிவர தண்ணீர் ஊற்றி பராமரித்து பொதுமக்களின் தாகத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீதா, மீன்சுருட்டி.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் எம்.எம்.நகர், வெங்கடாசலபதி நகர், சித்தர் கோவில் உள்ளது. இங்கு தெருக்களில் ஆங்காங்கே கொட்டப்படும் குப்பை கழிவுகள் சரிவர அகற்றப்படுவதில்லை. இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு கொசு தொல்லையும் உள்ளது. இதில் நகராட்சி அதிகாரிகள் கவனம் கொண்டு குப்பைகளை அள்ளிச்செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வெங்கடாசலபதி நகர், பெரம்பலூர்.