'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் பொட்டல்புதூர் பஞ்சாயத்து துர்க்கை அம்மன் கோவில் தெருவில் போதிய தெருவிளக்குகள் அமைக்காததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே வர அச்சப்படுவதாக, கடையத்ைத சேர்ந்த திருக்குமரன் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு நேற்று முன்தினம் பிரசுரமானது. இதற்கு உடனடி நடவடிக்கையாக அங்கு புதிய தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதற்கு உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார்.

கால்வாயை ஆக்கிரமித்த அமலை செடிகள்

பாளைங்கோட்டை குலவணிகர்புரம் பாளையங்கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அமலை செடிகள் ஆக்கிரமித்து காணப்படுகிறது. மேலும், கால்வாயில் கழிவுநீர் கலப்பதுடன் குப்பைகள் நிறைந்தும் காட்சி அளிக்கிறது. அந்த கழிவுகள் நிறைந்த தண்ணீர் விவசாய நிலங்களுக்கு செல்கிறது. எனவே, பாளையங்கால்வாயை தூர்வாரி, கழிவுநீர் சேராத வகையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மகேஷ். நெல்லை.

நாய்கள் தொல்லை

நெல்லை பிருந்தாவன்நகர் தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள், பெண்கள் தெருக்களில் நடமாட முடியவில்லை. மக்கள் அச்சத்துடனேயே சென்று வர வேண்டிய நிலை உள்ளது. எனவே, தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

- கபீர், பிருந்தாவன்நகர்.

தண்ணீர் தொட்டியை சூழ்ந்த கருவேல மரங்கள்

நாங்குநேரி தாலுகா ஆழ்வாநேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுக்குறிச்சி பஸ்நிறுத்தம் அருகில் தண்ணீர் தொட்டி உள்ளது. அந்த தொட்டி பழுதடைந்து சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் அதை சுற்றிலும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி, சீமைக்கருவேல மரங்களை அகற்றி அந்த தண்ணீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

- மணிகண்டன், கடம்பன்குளம்.

தாமிரபரணி தண்ணீர் வேண்டும்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கீழவீரசிகாமணி ஊராட்சிக்கு உட்பட்ட கே.வி.ஆலங்குளம் கிராமத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால், அதன்பிறகு தண்ணீர் வழங்கவில்லை. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தாமிரபரணி தண்ணீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

- ராஜ், கே.வி.ஆலங்குளம்.

சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?

ஆலங்குளம் பேரூராட்சி 15-வது வார்டில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு 9 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வராமலேயே, சேதமடைந்து வருகிறது. இதனால் பன்றி உள்ளிட்ட விலங்குகள் அங்கு சுற்றித்திரிகின்றன. மேலும், மதுப்பிரியர்களும் அங்கு சென்று மது அருந்துகின்றனர். இதை தடுக்க அந்த சுகாதார வளாகத்தை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- ஆறுமுகராஜ், ஆலங்குளம்.

தெருவில் ஓடும் கழிவுநீர்

சுரண்டை நகராட்சி 1-வது வார்டு பாறையடி தெருவில் வாறுகால் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் தெருவில் ஓடுவதால் சுகாதார கேடு நிலவுகிறது. எனவே, இங்கு அதிகாரிகள் வாறுகால் அமைத்து தர வேண்டுகிறேன்.

- முப்பிடாதி, சிவகுருநாதபுரம்.

இடிந்து விழும் நிலையில் மோட்டார் அறை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தாரி அம்மன் கோவில் பகுதியில் இருந்து செல்லும் இறக்கத்தில் மோட்டார் அறை மீது தண்ணீர் தொட்டி அமைந்துள்ளது. அந்த மோட்டார் அறை சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு அதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- நேதாஜி பாலமுருகன், கோவில்பட்டி.

தண்ணீர் தராத அடிபம்பு

உடன்குடியில் இருந்து சிவள்விளைப்புதூர் செல்லும் மெயின் ரோட்டில் வடக்கு காலன்குடியிருப்பு அருகே அடிபம்பு ஒன்று பழுதடைந்து தண்ணீர் தராமல் உள்ளது. அதை மட்டை மற்றும் கயிற்றை கொண்டு கட்டி வைத்து உள்ளனர். அந்த அடிபம்பை பழுது நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் அப்பகுதி மக்கள் பெரிதும் பயன் அடைவர்.

- சரவணன், உடன்குடி.


Next Story