தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

ரேஷன் கடையில் மண்எண்ணெய் வழங்குவதில் பாரபட்சம்

பெரம்பலூர் சங்குபேட்டை பகுதியில் உள்ள ரேஷன் கடை ஓன்றில் மண்எண்ணெய் ஏற்கனவே வழங்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறதாம். புதிதாக வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்எண்ணெய் வழங்கப்படுவதில்லையாம். இதனால் அவர்கள் மண்எண்ணெய் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனராம். வாங்கி செல்லப்படும் மண்எண்ணெய் வெளியில் அதிக விலைக்கு விற்கப்படுகிறதாம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

பொதுமக்கள், சங்குபேட்டை.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

பெரம்பலூர் தீரன் நகரில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகள் காற்றில் பறந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. மேலும், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், தீரன்நகர்.

போதையால் தடம் மாறும் இளைஞர்கள்

பெரம்பலூர் நகரில் கஞ்சா விற்பனை மறைமுகமாக நடைபெற்று வருகிறது. இதனால் மது, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களுக்கு ஏற்கனவே அடிமையான இளைஞர்கள் சிலர் தற்போது கஞ்சாவுக்கு அடிமையாகி வருகின்றனர். போதையினால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. சிலர் போதையால் தடம் மாறி குற்ற வழக்குகளில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.


கால்நடைகளால் பொதுமக்கள் பாதிப்பு

பெரம்பலூர் நகரப்பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் பஸ் நிலையம் மற்றும் தெரு பகுதிகளில் ஏராளமான நாய், மாடு உள்பட பல்வேறு கால்நடைகள் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் வாகனங்களில் செல்வோரையும் துரத்தி சென்று நாய்கள் கடிக்க பாய்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

தடுப்புச்சுவர் அமைக்க வேண்டுகோள்

பெரம்பலூர் டவுனில் இருந்து எளம்பலூர் புறவழிச்சாலை முதல் சென்னை பைபாஸ் சாலை வரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக சாலை அமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது. பின்னர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி முகப்பு முதல் ரோவர் நூற்றாண்டு சாலை வரை புதிதாக சாலை மேம்படுத்தப்பட்டு சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு தெருவிளக்குகள் வைக்கப்பட்டது. இதனால் தற்போது சாலையில் போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. தற்போது எளம்பலூர் ஏரிக்கரை அருகே வளைவுகள் நேர்படுத்தப்பட்டு வருகிறது. எனவே ரோவர் நூற்றாண்டு சாலையை போல ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி முகப்பு முதல் உப்பு ஓடை வரை சாலையை அகலப்படுத்தி சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைத்து தெருவிளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.


Next Story