தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சுகாதார சீர்கேடு
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி கிழக்குத்தெரு நீர்த்தேக்க தொட்டி அருகில் குடியிருப்பு பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதோடு, கொசுத்தொல்லைகளும் இருக்கிறது. மேலும் துர்நாற்றம் அடிப்பதால் இப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், முக்கண்ணாமலைப்பட்டி.
பாழடைந்த கழிவறை
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு தெற்குப்பட்டியில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள் நல மையத்தில் உள்ள குழந்தைகள் கழிவறை பயன்பாடின்றி பாழடைந்த நிலையில் இருந்து வருகிறது. இதனால் குழந்தைகள் அவதியடைகின்றனர். எனவே இந்த கழிவறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வடகாடு.
பயனற்ற மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
புதுக்கோட்டை மாவட்டம், மேலப்புள்ளான் விடுதி ஏ.டி.காலனி பகுதியில் வசிக்கும் பொது மக்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ஏ.டி.காலனி.
தானிய உலர்களம் சீரமைக்கப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு புள்ளாச்சி குடியிருப்பு அருகே விவசாயிகளின் பயன்பாட்டிற்காக தானிய உலர் களம் அமைக்கப்பட்டுள்ளது. தானியங்களை உலர்த்த அமைக்கப்பட்ட இந்த உலர் களமானது காலப்போக்கில் பராமரிப்பின்றி தற்போது சிதிலமடைந்து அவற்றை சுற்றி புதர் மண்டியுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வடகாடு.
நோய் பரவும் அபாயம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மணிவிளான் தெரு பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலை ஓரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளதால், தற்போது தூர்ந்துபோன நிலையில் கழிவுநீர் செல்ல வழிஇன்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அறந்தாங்கி.