தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

திருச்சி மாவட்டம், தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் காருகுடி பிரிவு ரோடு அருகே சாலையின் 2 பக்கத்திலும் உள்ள வேகத்தடைக்கு வெள்ளை வர்ண கோடுகள் அழிந்து விட்டதால் விபத்துகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் வேகத்தடைக்கு வெள்ளை வர்ண கோடுகள் அடிக்கவேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வேகத்தடைகளுக்கு வெள்ளை வர்ண கோடுகள் பூசினர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், தா.பேட்டை

கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

திருச்சி மாவட்டம், லால்குடியில் இருந்து காட்டூர் கோமாகுடி பூண்டி வழியாக திருக்காட்டுப்பள்ளி வரை ஒரே ஒரு நகர பஸ் மட்டும் இயக்கப்படுகிறது. இப்பகுதியில் பல கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் வசிப்பதால் அத்தியாவசிய தேவைகளுக்கு திருக்காட்டுப்பள்ளிக்கும், லால்குடிக்கும் செல்ல வேண்டியுள்ளது. எனவே இப்பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆசைதம்பி, காட்டூர்

சாலையை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்

திருச்சி மாவட்டம், பொன்மலைப்பட்டி மெயின் சாலையோரத்தில் ஏராளமான கருவேல மரங்கள் முளைத்துள்ளன. இவை அந்த பகுதியில் சாலையை ஆக்கிரமித்து உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் நான்கு சக்கர வாகனங்கள் வரும்போது சாலையோரம் ஒதுங்க முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பொன்மலைப்பட்டி

சுகாதார சீர்கேடு

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையில் உள்ள உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் சிலர் ஏராளமான கோழிக்கழிவுகளையும், மீன் கழிவுகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் அந்தக் கழிவுகளை தின்பதற்கு நாய்கள் கூட்டமாக வந்து திரிகின்றன. இதனால் இந்த கரையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் மிகுந்த அச்சத்துடன் செல்லும் சூழ்நிலை நிலவுகிறது. அங்கு குப்பைகள் மலைபோல் தேங்கி உள்ளன. இதனால் மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சோமரசம்பேட்டை

மண் குவியலால் வாகன ஓட்டிகள் அவதி

திருச்சி தில்லைநகர் 11-வது 'பி' தெரு, மேற்கு விஸ்தரிப்பு நான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் மண் குவியலாக கொட்டப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஸ்ரீதர், தில்லைநகர்


Next Story