தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
டாஸ்மாக் கடை அகற்றப்படுமா?
கரூர் மாவட்டம், சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலை மூலிமங்கலம் பிரிவு எதிரே உள்ள தார்சாலை அருகில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தார்சாலை ஓரத்தில் டாஸ்மாக் உள்ளதால் மதுப்பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கி வந்து சாலையோரம் அமர்ந்து மதுவை அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்துவிட்டு செல்கின்றனர். மேலும், இரவு நேரங்களில் அந்த வழியாக பெண்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மதுபான கடைகள் செயல்படக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு இருந்தும் இங்கு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. எனவே, இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த டாஸ்மாக் கடையை அகற்றி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுப்பிரமணி, மூலிமங்கலம்.
குண்டும் குழியுமான சாலை
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், உழவர்சந்தைக்கு அருகில் உள்ள மண்சாலை குண்டும், குழியுமான நிலையில் உள்ளதால் மழை பெய்யும்போது சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வேலாயுதம்பாளையம்.
கழிவுநீரை அகற்ற வேண்டும்
கரூர் வடக்கு முருகநாதபுரம் தெருவில் உள்ள ஒரு கழிவு நீர் வாய்க்கால் நிரம்பியுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்து தர வேண்டும். இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுமக்கள், கரூர்
பொதுமக்கள், முருகநாதபுரம்.
ஆபத்தான கல்குவாரிகள்
கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம், உப்புப்பாளையம், பசுபதிபாளையம், தென்னிலை, பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு கல்குவாரிகளில் அரசு வரையறுத்த அளவுக்கு மேல் குழிகள் தோண்டப்பட்டு கற்கள் வெட்டப்பட்டு வருகிறது. சாலை ஓரத்தில் உள்ள கல்குவாரி பகுதி வழியாக வாகனங்கள் செல்லும்போது நிலை தடுமாறி அளவுக்கு அதிகமான ஆழத்தில் உள்ள கல்குவாரிகளில் வாகனங்கள் விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தமிழரசன், புன்னம்சத்திரம்.
நிழற்குடை அருகே நிற்காத பஸ்கள்
ஈரோடு பகுதியில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓலப்பாளையம் பிரிவு சாலை அருகே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பயணிகளின் நலன் கருதி நிழற்குடை கட்டப்பட்டது. வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் அந்த நிழற் கூடத்தில் அமர்ந்திருந்து பஸ்களில் ஏறி, இறங்கி சென்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் பஸ்கள் நிற்காததால் பயணிகள் இங்கு வந்து நின்று பஸ்சுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிழற்குடையில் இருந்த பயணிகள் அமர்ந்து செல்லும் கான்கிரீட் பலகைகளை மர்ம நபர்கள் எடுத்துச் சென்று விட்டனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ஓலப்பாளையம்.