தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பஸ் நின்று செல்ல நடவடிக்கை தேவை
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா அலுவலகம் புதுக்கோட்டை சாலையில் ஊருக்கு அப்பால் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு தினமும் பல்வேறு பணிகளுக்காக ஏராளமானோர் பஸ்களில் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு பஸ் நிறுத்தம் இல்லை. திருமணஞ்சேரி விலக்கு சாலையில் இருந்து பொதுமக்கள் நடந்து செல்லவேண்டி உள்ளது. இதனால் முதியோர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பெரும் சிரமபடுகின்றனர். எனவே கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்லவும் அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கறம்பக்குடி
கழிவுநீர் செல்லும் வாய்க்கால்களை தூர்வார வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் கைக்குளான்வயல் ஊராட்சி கே புதுப்பட்டி கடைவீதியில் இருபுறமும் நீண்ட நாட்களாக கழிவு நீர் செல்லும் வரத்து வாய்க்கால் ஆங்காங்கே அடைப்பட்டு கிடைக்கின்றது. இதனால் மழை பெய்யும் பொழுது தண்ணீர் அனைத்தும் சாலையில் ஓடுகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கே.புதுப்பட்டி கடைவீதியில் உள்ள கழிவுநீர் செல்லும் வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கே.புதுப்பட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மனவளக்கரையில் வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்ட மின்கம்பம் பழுதடைந்து மிக மோசமான நிலையிலும் ஆபத்தான நிலையிலும் உள்ளது. இதை மாற்றி புதிய மின் கம்பம் நட வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி எதிரொலியாக மின்வாரிய அதிகாரிகள் பழுந்தடைந்த மின்கம்பத்தை அகற்றி, புதிய கம்பத்தை நட்டனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், திருமயம்.
ஆக்கிரமிப்புகள் அகற்ற கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலமத்தில் உள்ள காந்திஜி சாலையில் 200-க்கும் மேற்ப்பட்ட கடைகள் உள்ளது. இதனால் எப்போதுமே இந்த சாலை போக்குவரத்து நெரிசலான சாலையாக உள்ளது. இந்தநிலையில் சாலையில் மண், மணல், செங்கல் வைத்தும், கடைகளை முன்னால் இழுத்தும் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் தால் காலை நேரத்தில் இந்சாலையில் அதிகளவு நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், விவசாயிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், கீரமங்கலம்.
ஊர் பெயர் பலகையில் ஒட்டப்படும் பதாகைகள்
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம் உள்பட சுற்றியுள்ள கிராமங்களில் கிராமத்தின் ஊர் பெயர் பலகை மற்றும் வழிகாட்டி பலகைகள், கி.மீ கல்களில் விளம்பர பதாகைகள் ஒட்டப்பட்டு வருகிறது. இதனால் ஊர் பெயர் பலகைகளை மறைத்து விடுவதால் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள், பயணிகள் ஊர் பெயர் தெரியாமல், திசைகள் தெரியாமல் மாறிச் சென்று அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், கீரமங்கலம்.