தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருநாய்கள் தொல்லை
திருச்சி மாநகராட்சி 58-வது வார்டு அருணாச்சலநகர் , அன்பு நகர் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. இதனால் அவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் முதியவர்கள், குழந்தைகள் தெருக்களில் நடமாடவே அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருச்சி.
ஆபத்தான மின்கம்பம்
திருச்சி மாவட்டம், பூனாம்பாளையம் கிராம் கருணாநிதி நகர் 1-வது தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுக்குடிநீர் குழாய் அருகே மின்கம்பிகளை தாங்கி நிற்கும் ஒரு மின்கம்பம் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிர்சேதம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பூனாம்பாளையம்
புதர்மண்டி காட்சியளிக்கும் மயானம்
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்புலியபுரம் விஸ்வாம்பாள் சமுத்திரம் வடக்கு கிராமத்தில் மயானம் ஒன்று உள்ளது. இந்த மயானத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. மேலும் இங்கு குடிநீர் வசதி இல்லாமல் உள்ளது. மேலும் மாயனாத்திற்கு செல்ல சரியான சாலை வசதி இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், துறையூர்.
குடிநீர் வசதி வேண்டும்
திருச்சி மாவட்டம், அல்லூர் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 4 வார்டுகளுக்கு மட்டுமே காவிரி குடிநீர் கிடக்கிறது. மற்ற 5 வார்டுகளுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை இல்லை. எனவே குடிநீர் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஅப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நவநீதன், அல்லூர்.
வேகத்தடை அமைக்கப்படுமா?
திருச்சி அரசு மருத்துவமனை முன்புறமுள்ள சாலைகளில் கடந்த சில நாட்களாக சாலை பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் அந்த சாலையில் புழுதி பறந்து வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். தற்போது அந்த சாலை போடப்பட்டுள்ளது. ஆனால் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகிறார்கள். அவர்களுடன் நோயாளிகளின் உறவினர்களும் வந்து செல்கிறார்கள். இதனால் அந்த பகுதி எப்போதும் பரபரப்புடன் காணப்படும் பகுதியாக உள்ளது. ஆனால் அரசு மருத்துவமனை முன்புறமுள்ள சாலையில் வாகனங்கள் அதிகவேகமாக சென்று வருவதால் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு வருகிறது. ஆகவே இந்த சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருச்சி