தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நாய்கள் தொல்லை
கரூர் மாவட்டம், தரகம்பட்டி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், தரகம்பட்டி.
சிறுநீர் கழிப்பதால் சுகாதார சீர்கேடு
கரூர் பஸ் நிலையத்திற்கு தினமும் எராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இரவு நேரங்களில் பயணிகள் திறந்தவெளிகளில் சிறுநீர் கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கரூர்.
கனரக சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
கரூர் மாவட்டம் குளித்தலை நகரப் பகுதியில் உள்ள பல்வேறு வகையான கடைகளுக்கு பெரு நகரங்களில் இருந்து லாரிகள் மூலம் உடைகள், மளிகை பொருட்கள், அரிசி, உரம் உள்பட பல்வேறு பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன. அந்தப் பொருட்களை ஏற்றி வரும் கனரக சரக்கு வாகனங்கள் குளித்தலை நகர பகுதியில் உள்ள அந்தந்த கடைகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டு அந்த கடைகளுக்கு தேவையான பொருட்கள் அங்கு இறக்கி வைக்கபடுகிறது. இதுபோல் வரும் சரக்கு வாகனங்கள் நீண்ட நேரம் அந்தந்த பகுதிகளில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் சரக்கு வாகனங்களை நிறுத்தி பொருட்களை விரைவாக இறக்கச் செய்ய அந்தந்த கடை உரிமையாளுக்கு அறிவுறுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள் குளித்தலை.
பயிர் பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கப்படுமா?
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். ஆனால் இந்த பகுதிகளில் குறைந்த அளவே கிணற்று நீரை கொண்டு முருங்கை பயிரிட்டு வருகின்றனர். தற்போது மழை காலம் தொடங்க உள்ள நிலையில் முருங்கை மற்றும் இதர பயிர் வகைகளை பூச்சி தாக்குதலில் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகளுக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும்என கேட்டு கொள்கிறோம்.
பொதுமக்கள், அரவக்குறிச்சி.
டாஸ்மாக் கடை அகற்றப்படுமா?
கரூர் மாவட்டம், சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலை மூலிமங்கலம் பிரிவு எதிரே உள்ள தார்சாலை அருகில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தார்சாலை ஓரத்தில் டாஸ்மாக் உள்ளதால் மதுப்பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கி வந்து சாலையோரம் அமர்ந்து மதுவை அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்துவிட்டு செல்கின்றனர். மேலும், இரவு நேரங்களில் அந்த வழியாக பெண்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மதுபான கடைகள் செயல்படக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு இருந்தும் இங்கு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. எனவே, இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த டாஸ்மாக் கடையை அகற்றி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுப்பிரமணி, மூலிமங்கலம்.