தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

குளம் ஆக்கிரமிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு கிராமத்தில் நொச்சோடை குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள சுமார் 100 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த குளத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைத்து வருகின்றனர். இதனால் குளத்திற்கு தண்ணீர் வரும் வழித்தடம் அடைக்கப்பட்டு உள்ளது. எனவே விவசாயிகளின் நலன்கருதி நொச்சோடை பாசன குளத்தின் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள். குளந்திரான்பட்டு.

பாலத்தில் விரிசல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள காயம்பட்டி-கதுவாரிப்பட்டி சாலை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் புதுக்கோட்டைக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில் கதுவாரிப்பட்டி சாலையில் போடப்பட்டுள்ள பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ன கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், ஆலங்குடி.

மின்தடையால் பொதுமக்கள் பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பராமரிப்பு பணிக்காக மின் தடை ஏற்பட்டது. இதனால் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வந்திருந்த பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்படவில்லை. அப்படியானால் அடுத்த மாதம் சேர்த்து வழங்கப்படுமா? என்று அப்பகுதி மக்கள் கேள்வி கேட்டதற்கு அப்படி தங்களுக்கு எந்த வித தகவலும் வரவில்லை என்று கூறியுள்ளனர். மின்தடையால் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், வடகாடு.

அரசு விரைவு பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் அரசு விரைவு பஸ் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா காலத்தில் இங்கிருந்து இயக்கப்பட்ட பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சென்னை செல்வதற்கு புதுக்கோட்டைக்கு சென்று அங்கிருந்து மாற்று பஸ் மூலம் சென்னைக்கு சென்று வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட விரைவு பஸ்சை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், ஆலங்குடி.


போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை தேவை

புதுக்கோட்டை, கறம்பக்குடி வளர்ந்துவரும் வர்த்தக நகரமாகும். தாலுகா தலைமையிடமாகவும் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை ஒட்டிய பகுதி என்பதால் இந்த வழித்தடத்தில் ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் கறம்பக்குடிக்கு வந்து செல்கின்றனர். இதனால் கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. ஆனால் கறம்பக்குடியில் போக்குவரத்து போலீசார் இல்லை.இதனால் வாகன ஓட்டிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே கறம்பக்குடியில் போக்குவரத்து காவலர் பிரிவை உருவாக்கி நெருக்கடியை சரிசெய்ய வேண்டும்.

சச்சின் தாரா, கறம்பக்குடி


Next Story