தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

பயனற்று கிடக்கும் அடிபம்பு

கரூர் - வாங்கல் செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு அடிபம்பு மக்கள் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளது. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த அடிபம்பு நீண்ட நாட்களாக பயனற்று கிடக்கிறது. மக்கள் இதைப் பயன்படுத்தாததால் அடிபம்பை சுற்றிலும் புல் மற்றும் செடிகள் முளைத்துள்ளன. இதனால் பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்களும் நடமாட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த அடிபம்பை சரிசெய்துபொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கரூர்

பள்ளத்தை மூட வேண்டும்

கரூர், அரசு காலனியில் உள்ள சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாய் சரிசெய்ய தோண்டப்பட்ட பள்ளம் நீண்ட நாட்களாக மூடப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கீழே விழுந்து விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்படி பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அரசு காலனி

போக்குவரத்து நெரிசல்

கரூர் நகரின் மைய பகுதியான ஜவகர்பஜாரில் தாலுகா அலுவலகம், கிளை சிறை, தீயணைப்பு நிலையம், தலைமை தபால் அலுவலகம், ஜவுளிக்கடைகள், நகை கடைகள், ஓட்டல்கள், பேக்கரி உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பல்வேறு பொருட்களை பொதுமக்கள் வாங்க இப்பகுதிக்கு வருகின்றனர். பெரும்பாலும் இருசக்கர வாகனத்தில் வரும் பொதுமக்கள், வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். நாள்தோறும் நூற்றுக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுகிறது. இதனால் ஜவகர்பஜார் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே கரூர் ஜவகர்பஜார் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வாகனங்களை சாலையின் ஓரத்தில் முறைப்படி நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கரூர்

ஆகாய தாமரைகளை அகற்றக் கோரிக்கை

கரூர் மாவட்டம், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் இருந்து மரவாபாளையம், புங்கோடை, சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம் ,திருக்காடுதுறை வழியாக புகழூர் வாய்க்கால் செல்கிறது .ஒவ்வொரு ஊர் பகுதிகளிலும் காவிரி ஆற்றுக்கு செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புகழூர் வாய்க்காலில் தண்ணீரில் வரும் தண்ணீர் தாமரைகள் ஆங்காங்கே பாலங்களில் தேங்கி நிற்பதால் தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல முடியாமல் உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நொய்யல்.

அதிக கற்களை ஏற்றி செல்லும் லாரிகளால் விபத்து

கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு கற்கள் அனுப்பப்பட்டு வருகிறது.இந் நிலையில் லாரியில் அதிக அளவு பெரிய கற்களை பாடி மட்டத்திற்கு மேல் ஏற்றி செல்லும் போது லாரிகள் அதிவேகத்தில் செல்லும்போது லாரியின் பாடி மட்டத்திற்கு மேல் உள்ள கற்கள் தார் சாலையில் விழுந்து செல்கின்றன .லாரிக்கு பின்னால் வரும் வாகனங்களின் மீது கற்கள் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், புன்னம் சத்திரம்.


Next Story