தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

ஏரியை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேலமரங்கள்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழஉசேன்நகரம் கிராமத்தில் நாயகி அம்மன் ஏரி உள்ளது. இந்த ஏரி பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடப்பதால் சீமைகருவேல மரங்கள் முளைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரிக்கு தண்ணீர் வர வழியில்லாமல் வரண்டு கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனேவ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணிவேல் , கீழஉசேன் நகரம்.

சுகாதார வளாகம் சுத்தம் செய்யப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், பாடாலூர் கிராமத்தில் பொது சுகாதார வளாகம் உள்ளது. இங்கு கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் அதனை பயன்படுத்த முடியாமல் அப்படியே விட்டு விட்டனர். மேலும் சுகாதார வளாகத்தை சுற்றி செடி, கொடிகள் முளைத்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதனை சுத்தம் செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பாடலூர்.

போக்குவரத்திற்கு இடையூறு

பெரம்பலூர் டவுன் பகுதியில் உள்ள ரோவர் பள்ளி ஆர்ச் பகுதியில் இருந்து எளம்பலூர் வரையுள்ள சாலையில், ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புக்கட்டைகளில் ஆங்காங்கே இளைஞர்கள் இரவு நேரத்தில் கூட்டாக அமர்ந்து கொள்கின்றனர். மேலும் அவர்கள் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சாலையோரம் நிறுத்துவதினால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதனை பெரம்பலூர் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

குப்பைகளை சேகரிக்க வேண்டும்

பெரம்பலூர்-எளம்பலூர் சாலை கீரின் சிட்டியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அங்கு குப்பைகளை சேகரிக்க நகராட்சி தூய்மை காவலர்களும் வருவதில்லை. குப்பை தொட்டிகளும் வைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தெரு ஓரங்களில் குப்பைகளை கொட்டி வைத்து வருகின்றனர். குவிந்து வரும் குப்பைகளை நாய்கள் கிளறி விடுகிறது. மேலும் காற்றில் பறந்து தெரு முழுவதும் குப்பைகளாக காணப்படுகிறது. எனவே நகராட்சி நிா்வாகம் குப்பைகளை சேகரிக்க தூய்மை காவலர்களையும், குப்பை தொட்டிகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

ஷேர் ஆட்டோக்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்

பெரம்பலூர் நகர்ப்பகுதியில் ஷேர் ஆட்டோக்கள் அதிகமாக இயங்குகின்றன. ஆனால் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தம் இல்லாத பகுதிகளிலும் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றனர். இதனால் அதன் பின்னால் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே போக்குவரத்து போலீசார் ஷேர் ஆட்டோக்களை கட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தங்களில் மட்டும் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.


Next Story